குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Saturday, July 24, 2010

நோன்பின் மகத்துவம்

நோன்பு என்பது எல்லா சமூக மக்களுக்கும் பொதுவான ஒன்றுதான், அதை தவறுதலாக முஸ்லீம் மக்களுக்கு மட்டும்தான் முஸ்லீம் கடவுள் வகுத்து வைத்துள்ளதாக கருதுகின்றனர். நோன்பால் உடல் நலம் பெருவதோடு மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் துணை புரிகிறது.

நோன்பு சமீபகாலமாக தோன்றியது அல்ல அது இறைவனால் உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து தொன்றுத்தொட்டு வரக்கூடிய ஒரு வழக்கமாகவே உள்ளது. இதையே இறைவன் தனது திருமறையில் அழகாக கூறுகிறான்.

"ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்". (2:183)
இதன் மூலம் நோன்பு தன் மூதாதயர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளதுப் போல் நம் மீது அது கடமையாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகப் உணர்த்துகிறது.
நோன்பால் மனதையும் கட்டுப்பாட்டுகுள் கொண்டுவந்து தீயச்செயல்களிலிருந்து விலகி செல்ல அது வழிவகுக்கிறது. நோன்பு யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் நோற்கலாம், இறைவன் நோன்பு நோற்பதற்காக ஒரு மாதத்தையே தன் அடியாருக்கு வழங்கியுள்ளான். அம்மாதத்தில் அனைவரும் கட்டாயமாக நோன்பு நோற்க வேண்டும். அது சில காரணத்தினால் சில நபர்கள் மீது விலக்களிக்கிறது. ஆனால் அதை பின்வரும் காலங்களில் நோற்றாக வேண்டும். இதையே இறைவன் திருமறையில் இப்படி கூறுகிறான்.
"(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஃபித்யாவாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்)". (2:184)
மற்ற எல்லா காலங்களை விட ரமலான் மாதத்தில் கட்டாயம் நோன்பு நோற்பதே சிறப்பானதாகும். அதற்கு நன்மைகளும் அதிகம், காரணமில்லாமல் அந்நாளில் நோன்பை விட்டுவிட்டு பின்வரும் நாளில் அதை நோற்றால், அந்நாளின் சிறப்புக் கிடைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நபரும் தனக்காக நோன்பு நோற்க வேண்டும், பிறர் தன்னைப் பற்றி உயர்வாக கூற வேண்டும் என்பதற்காக நோன்பை எக்காலத்திலும் நோற்கக் கூடாது. நோன்பின் மாண்பைப் பற்றி நாமும் தெரிந்து அதன் மகிமையை பிறருக்கும் உணர்த்த வேண்டும், இதையே இறைவன் தன் திருமறையில் இவ்வாறுக் கூறுகிறான்.
"ரமலான் மாதம் எத்தகையதெனில் அதிலேதான் மனிதிகளுக்கு நேர்வழிகாட்டியாகவும், தீர்க்கமான தெளிவும் அருள்வழியும் உள்ளடக்கிய அல் - குர்ஆன் இறக்கப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு வைக்கட்டும்"
"உங்களில் எவராவது அக்காலத்தில் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் மற்ற நாட்களில் அதை கணக்கிடு நோற்கட்டும்! அல்லாஹ் உங்களிடமிருந்து விரும்புவதெல்லாம் இலேசைத்தான். அவன் உங்களிடமிருந்து கஷ்டத்தை விரும்பவில்லை. நோன்பு மாத நாட்களின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்து, அவன் உங்களை நேர்வழியில் நடத்தியத்ற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காவே! (இதன் மூலம்) நீங்கள் நன்றிக்கடன் செலுத்தியவர்களாகலாம்."
உலகியல் கண்ணோட்டம்:
பொதுவாக இயங்கும் சக்திப் பெற்ற அனைத்தும் ஓய்வு எடுப்பது என்பது உலக நியதி. உதாரணமாக கல்வி நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம் ஒரு கல்வி ஆண்டில் குறிப்பிட்ட நாட்கள் கோடை விடுமுறையாக விடப்படுகிறது, ஏனென்றால் ஓய்வு வேண்டும் என்பதற்காகவே, அதுபோல இயந்திரம் மற்றும் மோட்டார் வண்டி போன்றவற்றை சிலகாலம் இடை நிறுத்தி வைப்பதை காண்கிறோம், ஏனென்றால் அதன் பிறகு அது சிறப்பாக செயல்படுவதற்கு வழிவகை செய்கிறது. "அதுபோலவே தொடர்ந்து உணவு உட்கொண்டிருக்கும் மனிதன் சிறிது காலம் அதற்கு ஓய்வு கொடுத்தால் அது பிறகு மனிதனின் உறுப்புகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வழமான வாழ்விற்கு வழிவகைச் செய்கிறது.
வைத்தியக் கண்ணோட்டம்:
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது நாம் அனுபவ மூலம் கண்கூடாகக் கண்ட உண்மை.
"நோய் அணுகாது பத்தியம் காப்பது வைத்தியத்திலும் சிறந்தது" என்கிறது ஓர் அரபியப் பழமொழி.
"ஒரு ஜான் வயிறு இல்லாட்டா
உலகில் ஏது கலாட்டா? என்று பாடினான் ஒரு கவிஞன்.
உலகில் தோன்றும் எல்லா விதமான ஒழுக்ககேடுகளுக்கும், நோய் நொவ்வல்களுக்கும் மனிதனின் ஒரு ஜான் வயிறே முழு முதற் காரணியாகும்.
இதுபோலவே நாம் உண்ணும் உணவு முறை தவறி உட்கொள்ளும் போது பல இன்னல்கள் தோன்றுகின்றன, இதை ரமலான் மாதம் மிக எளிமையாக தீர்த்து வைக்கிறது. பொதுவாக உடல் சுகமில்லை என்றால் மருத்துவரை சந்திக்கிறோம் என்றால் அவர் நம்மை சோதித்துவிட்டு மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்து விட்டு முதலில் சொல்வது உணவு கட்டுப்பாட்டைத்தான்.
நோய் வராமல் தடுப்பதற்கு "நோன்பு ஒரு தற்காப்புக் கேடயம்" என்று அன்னல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
ஒழுக்கவியல் ரீதியாக:
"இளைஞர்களே! உங்களில் எவர் சக்தியும் வசதியும் உடையவராக இருக்கிறாரோ அவர் திருமணம் செய்துக் கொள்க! முடியாத பட்சத்தில் அவர் நோன்பு வைக்கட்டும். ஏனென்றால் நோன்பு பார்வையைத் தாழ்த்தி ஒழுக்கக் கேட்டில் விழுவதில் இருந்து மனிதனைப் பாதுகாக்கிறது."
பெருமானார் (ஸல்) அவர்களது இந்த அறிவுரை மூலம் நோன்பு நோற்பதில் உள்ள ஒழுக்கவியல் ரீதியாக நன்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். நோன்பு நோற்பதால் நமக்குள் தன்னடக்கம் வந்துவிடுவதோடு, அனைத்து நற்குணங்களும் நம்மை வந்து சேர்ந்துவிடும்.
நோன்பை முறிக்கும் காரணிகள்:
1.பொய் சொல்வது
2.புறம் பேசுவது
3.கோள் சொல்வது
4.பொய் சத்தியம் செய்வது
5.பெண்களை இச்சையோடு பார்ப்பது (காமப் பார்வை)
இந்த ஐந்து காரணங்களினால் நோன்பு முறிந்துவிடும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். மேலும் எவர் ஒருவர் பொய் சொல்வதையும், பிறர் நம்மைப் போற்ற வேண்டும் என வாழ்வதையும் விடவில்லையோ அவரது நோன்பிற்கு இறைவனிடம் எந்த பயனும் கிடைக்காது. மேலே குறிப்பிட்டதிலிருந்து நோன்பு தன்னை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது தனது இச்சைகளையும் கட்டுப்படுத்தி நம்மை நல்வழியில் செல்ல உதவுகிறது.
மேலும் இந்தந்த காரணங்களால் நோன்பு முறிவதில்லை:
1.மறதியாக உண்ணுவது, பருகுவது
2.வாந்தி மற்றும் பேதி ஆகுதல்
3.இரத்தம் வெளியாகுதல் (மயக்கம் அடையும் நிலையைத்தவிர)
4.ஸஹர் செய்தபிறகு தூக்கத்தில் ஸ்கலிதம் வெளியாகுதல்

இபாதத்: (இறைவணக்கம்)
ரமலான் மாதத்தில் தான் அதிகமான இறைவணக்கதில் ஈடுபட முடியும், நோன்பு நோற்று குர்ஆன் ஓதுவது, ஹதீதுகளை படிப்பது, மார்க்க பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொள்வது போன்ற காரணங்களினால் இறைவனுடைய நெருக்கத்தை அதிகப்ப்டுத்த முடிகிறது. இந்த மாதத்தில் தான் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்பட்டு சொர்க்கத்தின் கதவுகள் திறந்து வைக்கப்படுகிறது, ஏனென்றால் இம்மாத்தில் அமல்கள் அதிகமாக இருக்கும். அப்பொழுது கேட்கும் துஆக்கள் உடனே அல்லாஹுத்தஆலாவால் அங்கிகறிக்கப்படுகிறது. இறைவன் நோன்பாளிகள் கேட்கும் துஆக்களை மறுப்பதில்லை அதனை அவன் உடனே கபுல் செய்து வைக்கிறான்.

குறிப்பு: தன் வீட்டில் உள்ளவர்களையும் மற்றும் அனைவரையும் நோன்பின் மகிமையை வழியுருத்தி நோன்பு நோற்க செய்வது ஒவ்வொரு முஃமீனுடைய கடமையாக இருக்கின்றது. வல்ல அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து ஈருலக நற்பயனையும் தந்தருள்வானாக! ஆமீன்!!.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email:

0 comments:

Post a Comment

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்