குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Saturday, July 31, 2010

ஹஜ் புனிதப் பயணம்

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் இறுதியாக இறைவனால் வகுத்து தந்துள்ள கடமை ஹஜ் செய்வதாகும். இந்த ஹஜ் கடமையில் என்ன இருக்கின்றது என்பதையும், வாழ்க்கையில் ஒரு முறை நிறைவேற்றப்படுகின்றகடமை என்ற அளவில் மட்டும் அதன் முக்கியத்துவம் நின்று விடாது. யாரொருவர் எந்த ஒரு தீயச் செயலிலும் ஈடுபட்டு விடாமல் இந்த ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றாரோ, அவருக்கு இறைவன் சொர்க்கத்தை ஹலாலாக்கி விடுகிறான். ஒருவர் ஹஜ் செய்வதற்கான காரணத்தையும், ஹஜ்ஜில் செய்யவேண்டிய கடமைகளைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எவர் ஒருவரும் ஏனோதானோ என்றும், வெறும் சடங்குக்காகவும் ஹஜ் செய்யக்கூடாது

லப்பைக்கல்லாஹும்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீகலக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஃமத லகவல் முல்க், லா ஷரீகலக்

பொருள்:

இதோ உன் அழைப்பிற்கு பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். யா அல்லாஹ்! இதோ உன் அழைப்பிற்கு பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். இதோ உன் அழைப்பிற்கு பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். உனக்குக் கூட்டுக்காரர் (எவரும்) இல்லை. உன் அழைப்பிற்கு பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். நிச்சயமாக புகழ், அருட்கொடை, ஆட்சி யாவும் உனக்கே உரியது உனக்கு கூட்டுக்காரர் (எவரும்) இல்லை.

இந்த தல்பியாவை ஜம்ரத்துல் அகபா என்ற ஷைத்தானின் மீது கல்லெறியும் வரைக்கும் முழங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஹஜ்ஜின் சிறப்புகள்:

ஹஜ் புனிதப் பயணம் எந்த ஒரு ஆராவாரமும் இல்லாமல் எளிய வகையில் இறைவனும், அன்னல் நபி (ஸல்) அவர்களும் எவ்வாறு செய்ய வேண்டும் என வழியுருத்தினார்களோ! அதன் அடிப்படையில் ஹஜ் பயணம் அமைய வேண்டும். ஹஜ் என்பது அல்லாஹ்வின் வீடாகிய மக்கமா நகரில் அமைந்துள்ள கஃபாவைத் தரிசிப்பதும், இன்னும் சில கடமைகளையும், இவற்றை ஷவ்வால், துல்காயிதா, துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் வரை செய்வதைக் குறிக்கும். ஹஜ் கடமையானது ஹிஜ்ரத்திற்குப் பிறகு 9 ஆம் வருடத்திலிருந்து வயது வந்த ஆண் பெண்கள் மீதும், புத்தியுள்ள சுய நினைவில் இருக்கக் கூடியவர்கள் மீதும், ஹஜ் செய்ய சக்திப் பெற்ற ஒவ்வொரு முஃமீன்கள் மீதும் அவரது வாழ்நாளில் ஒரு முறையாவது நிறைவேற்ற வேண்டும் என்று கடமையாக்கப்பட்டுள்ளது.

இதனை இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார் இன்னும் அதற்குச் செல்வதற்குரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. (ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான். (3:96-97)


அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம். செயல்களிலேயே மிகச் சிறந்த செயல் எது? என்று கேட்ட பொழுது, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் நம்பிக்கைக் கொள்வது, எனக் கூறினார்கள். மீண்டும் மிகச் சிறந்த செயல் எது? என்று கேட்ட பொழுது, இறைவனுக்காக ஜிஹாத்தில் கலந்துக் கொள்வது என கூறினார்கள். அடுத்து மீண்டும் மிகச் சிறந்த செயல் எது? எனக் கேட்ட பொழுது, குறைகள் ஏதும் இல்லாத் வகையில் ஹஜ்ஜை நிறைவேற்றுவது எனக் கூறினார்கள். (நூல் புகாரி, முஸ்லிம் இன்னும் பல)

மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

ஹஜ் கடமையை யார் வரம்புகளை மீறாமலும், உடலுறவுகளில் ஈடுபடாமலும் அல்லது இறைவனுக்கு கீழ்படியாமை போன்ற தன்மைகளிலிருந்து விலகிய நிலையில் அந்தக் கடமையை நிறைவேற்றுவார்களெனில் அவர்கள், அன்று பிறந்த பாலகர்களாக பாவங்களற்ற நிலையில் தங்களது இல்லங்களுக்குத் திரும்புவார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம்)

ஹஜ்ஜில் தவிர்க்க இயலாத முதல்நிலைக் கடமைகள்:

1.இஹ்ராம் அணிந்திருத்தல் வேண்டும்.

2.அரஃபா மைதானத்தில் தங்குவது

3.தவாஃபுல் இபாழா (பெருநாளில் செய்யும் தவாஃப்)

4.ஸயீ செய்வது.

ஹஜ்ஜின் வாஜிபுகள்:

இந்த கீழ்கண்ட வாஜிபான கடமைகளில் ஏதாவதொன்று தவறினாலும், அதற்குப் பரிகாரமாக பிராணி ஒன்றை மக்காவில் அறுத்து ஏழைகளுக்கு அதன் இறைச்சியை வழங்க வேண்டும். இந்தப் பரிகாரத்தை வழங்குபவ்ர் அந்த பரிகாரப் பிராணியின் இறைச்சியிலிருந்து எதனையும் உண்ணுவது கூடாது. இவ்வாறு ஒருவரால் பரிகாரம் செய்ய இயலவில்லை எனில் அதற்குப் பதிலாக அவர் பத்து நாட்கள் நோன்பிருக்க வேண்டும். அதில் மூன்றை ஹஜ்ஜின் பொழுதும், மீதமுள்ள ஏழு நாட்களை ஹஜ்ஜிலிருந்து வீடு திரும்பியவுடன் நோற்க வேண்டும்.

1.மீக்காத் எல்லையில் இஹ்ராம் கட்டுவது

2.மாலை நேரம் வரை அரஃபா மைதானத்தில் தங்குவது

3.அரஃபாவை அடுத்து முஸ்தலிஃபாவில் தங்குவது (பலவீனர்களையும், பெண்களையும் தவிர, இவர்கள் பாதி இரவு வரை தங்குவது கூடும்)

4.தஷ்ரீக்குடைய இரவுகளில் மினாவில் தங்குவது (தஷ்ரீக்குடைய இரவுகள் துல்ஹஜ் 1,12,13 ஆகிய இரவுகள்)

5.தஷ்ரீக்குடைய நாட்களில் கல்லெறிதல்

6.தலைமுடி மழிப்பது அல்லது கத்தறிப்பது (ஆண்கள் மட்டும்)

7.தாஃபாவுல் வஃதா

ஹஜ்ஜை நிறைவேற்றுகின்ற போது முஸ்லிம்கள் தங்களது ஹஜ் இறைவனால் திருப்தியைப் பெற்றுத்தரக் கூடியதாக அமைய வேண்டுமென்ற எண்ணத்துடனும், பேணுதலுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். ஹஜ்ஜின் நடைமுறைகளான இஹ்ராம் அணிதல், உம்ரா செய்தல், தவாப் செய்தல், ஸயீச் செய்தல், அரபா, முஸ்தலிபா, மினா போன்ற மைதானங்களில் தங்குவது, கல்லெறிதல், உழ்ஹிய்யாக் கொடுத்தல் போன்ற எல்லா நடைமுறைகளையும் இறைவனுடைய அங்கிகாரத்தைப் பெற்றுத் தரும் வகையில் அமைய வேண்டும். மேலும் ஹஜ்ஜில் வீண் வார்த்தைகள், புறம் பேசுதல், தீய செயல்களை விட்டும் விலகி, ஹஜ்ஜில் தங்கியிருக்கும் நாட்களில் நல்ல முறையிலிம், முழு மனதுடனும் இபாதத் செய்தல், நற்செயல்கள் புரிதல், மார்க்க விளக்கங்களை தெளிவான முறையில் பகிர்ந்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

ஹஜ்ஜுக்குறிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும், எனவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான். மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது (நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும். எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். (2:197)

நீங்கள் அறுத்துப் பலியிடுகின்ற பிராணிகளின் மாமிசமோ அதனது இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைய மாட்டாது. மாறாக உங்களிடமுள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்.

ஸஹாபாக்கள் தமது ஹஜ் அங்கீகரிக்கப்பட்டதாக வேண்டும் என்ற உணர்வுடன் செயல்பட்டனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இஸ்லாத்தின் ஆரம்பப் பொழுதில், மனிதர்கள் ஹஜ் காலத்திலும் ஏனைய காலங்களிலும், மினா, அரபா, துல்மஜாஸ் ஆகிய இடங்களில் வியாபார கொடுக்கல் வாங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் ஸஹாபாக்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் இந்த இடங்களில் வியாபாரம் செய்வதற்குப் பயந்தனர். அப்பொழுது அல்லாஹுதஆலா கீழ்வரும் திருமறை வசனத்தை இறக்கியருளினான்.

(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலங்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது, பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது "மஷ்அருள் ஹராம்" என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்யுங்கள். உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.


இறைவன் மனிதர்களுக்கு வேண்டிய சலுகைகளை கொடுத்து அவன் எவ்வாறு நடந்துக் கொள்கிறான் என்று கவனித்தவனாகவே இருக்கிறான், நம்முடைய அத்துமீறிய போக்கு இறை அங்கீகாரத்தை பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். (2:198)

ஆண்களிலும் பெண்களிலும் உடல் உள இயல்புகளை நன்கறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் இருவருக்குறிய கடமைகளையும், பொறுப்புகளையும் தனித்தனியே அமைத்து வைத்துள்ளான். ஆண்களுக்கு அறப் போராட்டம் கடமையாக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அல் ஜிஹாதை சிறந்த நற்செயல் என்று நாம் கருதுகின்றோம். நாங்களும் இறைவழியில் போராடலாமா? என வினவினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள். வேண்டாம்! உங்களுக்குறிய சிறந்த ஜிஹாத் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் என பதிலளித்தார்கள். (நூல் - புகாரி)

ஹஜ்ஜின் ஒழுக்கங்கள்:

1.ஹஜ் செய்ய விரும்பும் ஒருவர் தான் ஹஜ்ஜுக்குப் பயனமாகும் முன்னர் தனக்குத் தேவையான ஹஜ்ஜின் சட்டங்களை படித்தோ கேட்டோ தெரிந்து கொள்வதும் அல்லது யாராவது ஒரு ஆலிம் அல்லது ஹஜ்ஜின் அனைத்து காரியங்களையும் அறிந்த அறிஞர்கள் அடங்கிய குழுவோடு செல்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும்.

2.தன் ஹஜ்ஜை நிறைவேற்றுவதைக் கொண்டு நம்மைப் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நெருக்கத்தையும், உவப்பையும் பெற ஆர்வம் இருக்க வேண்டும்.

3.நாம் பேசுகின்ற பேச்சு ஒவ்வொன்றும் இறைவனை போற்றி புகழ வேண்டும், தேவையற்ற பேச்சுகளை தவிர்த்து நல்ல வார்த்தைகளையும், திக்ரு, துஆ செய்துக்கொண்டிருக்க வேண்டும்.

4.பெண்கள் அனைவரும் புர்கா அணிந்து தன்னை மூடி மறைத்துக் கொண்டு, இறையச்சத்தோடு அங்கு செயல்பட வேண்டும்.

ஹஜ்ஜின் சில் கருத்துகள்: (பெண்களுக்காக)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருளினார்கள், பெண்கள் தங்களுடன் வருவதற்கு மஹ்ரமான ஆண் துணையைப் பெற்று விட்டார்கள் என்றால், ஆண்களைப் போலவே பெண்கள் மீதும் ஹஜ் கடமையாக இருக்கிறது. என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மஹ்ரமான ஆண் துணையுடன் இருக்கின்ற பெண்களைத் தவிர்த்து, பெண்கள் தனியாக இருக்கும் நிலையில் எந்த ஆணும் அவ்விடத்தில் நுழைவதுக் கூடாது.(நூல் - புகாரி, முஸ்லிம்)

இவ்வாறு மஹ்ரமில்லாத ஆண் துணையுடன் ஹஜ் செய்யக் கூடிய பெண்ணின் ஹஜ் நிறைவேறும், இருந்தாலும் அப்பெண்ணின் மஹ்ரமில்லாத ஆண் துணையுடன் சென்றதற்காக, ஒரு பாவத்தைச் செய்ததாகக் கருதப்படும். மேலும், ஒரு பெண் இன்னொரு பெண் துணையுடனோ அல்லது ஒரு பெண்ணின் குழுவுடனோ சென்று ஹஜ் செய்வதும், பயணம் செய்வதும் சட்டப்படி ஆகுமானதல்ல. அல்லது எங்கு சென்றாலும் ஒரு பெண்ணின் துணையுடனோ அல்லது பெண் குழுவின் துணையுடனோ செல்வது என்பது மஹ்ரமான ஆண் துணையுடன் செல்வதற்குறிய ஈடாக கருதப்பட மாட்டாது.

ஒரு பெண் ஹஜ் செய்ய வேண்டுமானால் தன் கணவ கணவரிடம் முதலில் அனுமதிப் பெற வேண்டும் என்பது மிகவும் போற்றக்கூடிய செயலாகும். கணவன் அனுமதி தர மறுத்தால், எதாவது ஒரு மஹ்ரமான ஆண் துணையுடன் அப்பெண் ஹஜ் செய்யலாம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், தன்னைப் படைத்தவனுக்கு மாறு செய்யக் கூடிய வகையில் நிர்பந்திக்கப் பட்டால் எந்தப் படைப்பினத்தின் மீதும் கீழ்ப்படிவது கடமையில்லை. (நூல் - முஸ்லிம்)

மேலும் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ் செய்வது என்பது விரும்பத்தக்கதல்ல, தன்னுடன் இறுதி ஹஜ் செய்ய வந்திருந்த மனைவிமார்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

இந்த ஹஜ் உங்களுக்குப் போதுமானது, இதன் பின் நீங்கள் உங்கள் வீட்டிலேயே தனித்திருங்கள் என்று (அதாவது இதற்குப் பின் உங்களுக்கு ஹஜ் என்பது கிடையாது, உங்கள் வீட்டிலேயே நீங்கள் இருந்துக் கொள்வது நல்லது) என்று கூறினார்கள்.


ஹஜ் (பிறருக்காக):

ஒருவர் ஹஜ் செய்வதற்குண்டான அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தும், அவரால் எப்பொழுதும் ஹஜ் செய்ய முடியாத நிலையில் இருப்பின், அவருக்காக ஒருவர் (ஆண் அல்லது பெண்) ஹஜ் செய்வது அவர் மீது தவிர்க்க இயலாத கடமையாக இருக்கிறது. அந்த நபருக்காக ஹஜ் செய்பவர், முதலில் தனக்காக ஒரு ஹஜ் செய்திருக்க வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் ஒருவர் இவ்வாறு கேட்டார். யா அல்லாஹ் சுப்ருமா என்ற மனிதருக்காக ஹஜ் செய்வதற்காக, உன்னுடைய அழைப்பிற்கு செவிசாய்த்தவனாக உன்னிடம் ஆஜராகி உள்ளேன் என்று கூறினார். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? எனக் கேட்டார்கள், அந்த மனிதர் இல்லை என பதில் கூறவே, முதலில் உனக்காக நீ ஹஜ் செய்துக் கொள், பிறகு சுப்ருமாவிற்காக ஹஜ் செய்துக் கொள் என பதில் கூறினார்கள். (நூல் - அபூதாவூத் மற்றும் இப்னு மாஜா)

குறிப்பு:இஸ்லாத்தின் கடமைகளில் அனைத்தையும் கடைப்பிடித்து இறைவழியில் நாமும் சென்று நம்மால் முடிந்த அளவு இறைவனின் துணைக் கொண்டு பிறருக்கும் உதவிசெய்து இறைவனுடைய அன்பையும் நெருக்கத்தையும் பெற்று ஈருலகிலும் வழமான வாழ்வைப் பெறுவோமாக! ஆமீன்!!


Tuesday, July 27, 2010

ஜக்காத் (இஸ்லாமிய வரி)

"நிச்சயமக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். (34:39)
இஸ்லாமிய ஐம்பெருங் கடமைகளுள் தொழுகையை அடுத்து முக்கியமான கடமை ஜக்காத் ஆகும். அருள் மறையில் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடப்படும் போதெல்லாம் ஜக்காத்தையும் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். இறைவனை வழிபடுவத்ற்காக தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்றால், இறை அடியார்களுக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் இறையன்பைப் பெறுவத்ற்காக ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.
காலில் முள் தைத்தால் கண்ணில் நீர் வழிகிறது. உடம்பில் எங்கேனும் அடிபட்டால் கரம் உடனே அவ்விடத்தைத் தேய்த்துக் கொடுக்கிறது. விரலில் பட்ட காயத்துக்காக இரவெல்லாம் கண் தூங்க மறுக்கிறது. இது போன்று சமுதாயத்தில் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை மற்றவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வறுமையால் வாடும் சகோதரனுக்கு வாழ்வளிக்க இஸ்லாம் ஜக்காத் என்ற கடமையின் மூலம் வழிவகைச் செய்கிறது.
பிறரின் ஏழ்மையை விரட்ட:
ஜக்காத்தின் தலையாய நோக்கமாக திகழ்வது ஏழ்மை எனும் ஒரு நிலையை விரட்டியடிக்க இறைவனால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். ஐம்பது பைசா, ஒரு ருபாய் போன்ற நாணயங்களாக அல்லது ஆடைகளாக கொடுப்பதினால் ஜக்காத் நிறைவேறிவிட்டது என கருதவேண்டாம்.
ஒரு செல்வந்தர் தனது ஆண்டு ஜக்காத்தின் மூலம் வாழத்துடிக்கும் ஒருவருக்கு ஒரு தொழில் துவங்க ஒத்துழைப்புத்தந்தால், அவர் தனது செல்வத்தைப் பெருக்கி, அவரும் பலருக்கு ஒத்துழைப்புத்தரும் சாத்தியக்கூறு ஏற்படலாம். அல்லது பல செல்வந்தர்கள் தங்கள் ஜக்காத்தை ஒன்று திரட்டி பல ஏழைகளுக்கு கூட்டுறவு முறையில் ஒரு பெரிய தொழில் துவங்க வழிவகை செய்யலாம். சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு செல்வந்தரும் ஆண்டொன்றுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் ஏழ்மை விரண்டோடிடும் என்பதில் ஐயமில்லை.
இக்கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு அருமையாக சித்தரிக்கிறார்கள்.
"ஓரிரு கவள உணவு அல்லது ஓரிரு பேரீத்தம்பழம் பெறுவதற்காக மக்களின் மத்தியில் சுற்றித் திரிபவர் ஏழையல்ல, வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வசதியைப் பெறாதவரே ஏழை. தருமம் கொடுப்பதற்காக அவரை யாரும் எளிதில் இனம் கண்டுக்கொள்ள இயலாது. யாசகம் பெறுவதற்காக அவர் மக்களின் மத்தியில் நிற்கவும் மாட்டார்" - (அல்ஹதீஸ் - நூல்:புகாரி)
அருள்மறை இவ்வாறுக் கூறுகிறது:
"அல்லாஹ்வின் பாதையில் சிறைப்பட்டுவிட்ட ஏழைகளுக்கு அவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவும் சக்தி பெறமாட்டார்கள். அவர்களின் முகவாட்டத்தைக் கொண்டு நீர் அவர்களை இனங்கண்டு கொள்வீர்! அவர்கள் மக்களிடம் வற்புறுத்தி யாசகம் கேட்கவும் மாட்டார்கள்" (2:273)
ஜக்காத் கடமையாக்கப்பட்டிருப்பதற்கு சமுதாய நோக்குமட்டும் காரண்மல்ல. ஒருவரின் செல்வம் அவரை விட்டு அகலாமல் நீடித்திருப்பதற்கும், செல்வத்தை அழிவின் பாதைகளிலிருந்து காப்பதற்காகவும் ஜக்காத் கடமையாக்கப்பட்டிருக்கிறது.
நாம் உட்கொள்ளும் உணவின் மூலமாக தேவையான சக்திகள் உடலுக்குள் செல்வதைப் போன்று, ஊறுவிளைவிக்கும் சில குணங்களும் புகுந்துவிடுகின்றன. நோன்பின் மூலமாக அக்குணங்களிலிருந்து உடலை சுத்தப்படுத்த இறைவன் வகுத்துதந்துள்ளான். அதுபோல நாம் செல்வத்தைத் தேடும் போது, அழிவை தேடித்தரும் சில பகுதிகள் செல்வத்தில் புகுந்து விடுகின்றன. தேடிய செல்வத்திலிருந்து, நம்மை அழிவுப் பாதைக்கு கொண்டுச் செல்லும் ஒரு பகுதியை அப்புறப்படுத்துவதற்குள்ள ஒரே வழி ஜக்காத்தாகும். இக்கருத்தை திருக்குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது.
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும், புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான். (9:103)
நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை மன்னிப்புக் கோருதலை ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (9:104)
நபிகள் நாயகம் (ஸல்) விளக்குகிறார்கள்.
"நோன்பு உடலை சுத்தம் செய்வதைப் போன்று ஜக்காத் செல்வத்தை சுத்தம் செய்ய வல்லதாகும்". (அல் ஹதீஸ்)
செல்வத்திலிருந்து, இறைவன் கூறும் அளவை அப்புறப்படுத்தும் போது, எஞ்சிய செல்வம் பரக்கத்தானதாக, பலன் தருவதாக, நிலைப் பெற்றதாக மாறிவிடும். அஃதனின்றி அந்த அளவை அப்புறப்படுத்தாவிடில் திரட்டிய செல்வத்துக்கும் அழிவு ஏற்படும் நிலையுண்டாகும். ஒரு பாத்திரப் பாலில் ஒரு துளி நஞ்சு கலந்தால் அது முழுவதும் எவ்வாறு நஞ்சாகிவிடுமோ! அதுப்போன்றுக் கொடுக்கப்படாத ஜக்காத் தொகை எல்லாச் செல்வத்தையும் பரக்கத்தற்றதாக, தேவையின் போது கை கொடுக்காததாக முறையற்ற வழியில் செல்விட வேண்டிய கட்டாயத்துள்ளானதாக மாற்றி விடும்.
கடலிலோ, திடலிலோ ஒருவரின் பொருள் அழிவதற்கு ஜக்காத் செலுத்தப்படாமலிருப்பதேயன்றி வேறு காரணமில்லை. (அல் ஹதீஸ்)
ஜக்காத்தின் மூலம் உங்களின் செல்வத்தைக் காப்பாற்றுங்கள். தருமத்தைக் கொண்டு உங்களின் நோய்க்கு மருந்திடுங்கள். சோதனைகளை பிரார்த்தனையைக் கொண்டு வெல்லுங்கள். (அல் ஹதீஸ்)
செல்வத்தின் மாமருந்து:
செல்வத்தை எல்லோரும் தேடுகின்றனர். ஆனால் தேடிய செல்வத்தை அழியாததாக, உரிய நேரத்தில் கை கொடுக்கவல்லதாக நினைந்தறியா விதத்தில் வளர்ச்சியடையக் கூடியதாக ஆக்கும் முறையை அறிந்து செயல்படுபவர் மிகவும் குறைவே!
கோடைக்காலத்தில் இலைகள் காய்ந்து உதிருவது மரத்துக்கு வறட்ச்சியான தோற்றத்தை தந்தாலும், அடுத்து வரும் வசந்த காலத்தில் புத்தளிர் விட்டு மரம் பசுமையடையப் போவதற்கு அது அறிகுறியாகும். நோன்பு நோற்பதால் உடல் மெலிவதைப் போன்றிருந்தாலும், பின்னர் நல்ல சக்திகள் சேகாரமாகி உடல் திடகாத்திரம் ஆவதுப் போல, ஜக்காத் செலுத்துவதால் செல்வத்தின் ஒரு பகுதி செலவிடப்பட்டு, குறைந்துவிட்டதாகத் தோன்றினாலும், உண்மையில் அதனால் செல்வம் வளர்ச்சியே அடைகிறது.
"(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜக்காத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது) அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்". (30:39)
எப்போது கொடுப்பது:
இறைவனுக்காக மட்டும் செய்யப்படும் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளில் உரிய தருனத்தை விட்டு முந்தக்கூடாது. ஆனால் இறையடியார்களுக்குப் பலனளிக்கும் ஜக்காத் கடமை வருவதற்கு முன்பே கூட கொடுக்கலாம். எனவே ஆண்டு முழுவதும் ஜக்காத்தைக் கொடுக்கலாம். இருப்பினும் ஒரு ந்ற்செயலுக்கு எழுபது பங்கு அதிகமான கூலி வழங்கப்படும் நாளாகிய ரமலான் மாதத்தில் கொடுப்பதை மக்கள் ஏற்புடையதாகக் கருதுகின்றனர். அதுவும் ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த லைலத்துல் கத்ரி இரவில் வழங்குவதை அநேகர் வழமையாகக் கொண்டுள்ளார்கள்.
குறிப்பாக ஒவ்வொரு நபரும் தான் வைத்திருக்கக் கூடிய சொத்துக்கள், பனம், பொருள் ஆகியவற்றில் 100 க்கு 2.5 சதவிகிதம் அளவு ஜக்காத் தொகையாகக் கொடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!.
முறையான வகையில் ஜக்காத்தை (இஸ்லாமிய வரியை) கொடுத்து நாமும் வழம் பெற்று நம்மை சார்ந்தவர்களையும் வழமோடு வாழவைத்து, வல்ல ரஹ்மானின் கிருபையையும், நெருக்கத்தையும் பெருவோமாக! ஆமீன்!!.
Saturday, July 24, 2010

அறியப் புகைப்படங்கள்
நோன்பின் மகத்துவம்

நோன்பு என்பது எல்லா சமூக மக்களுக்கும் பொதுவான ஒன்றுதான், அதை தவறுதலாக முஸ்லீம் மக்களுக்கு மட்டும்தான் முஸ்லீம் கடவுள் வகுத்து வைத்துள்ளதாக கருதுகின்றனர். நோன்பால் உடல் நலம் பெருவதோடு மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் துணை புரிகிறது.

நோன்பு சமீபகாலமாக தோன்றியது அல்ல அது இறைவனால் உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து தொன்றுத்தொட்டு வரக்கூடிய ஒரு வழக்கமாகவே உள்ளது. இதையே இறைவன் தனது திருமறையில் அழகாக கூறுகிறான்.

"ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்". (2:183)
இதன் மூலம் நோன்பு தன் மூதாதயர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளதுப் போல் நம் மீது அது கடமையாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகப் உணர்த்துகிறது.
நோன்பால் மனதையும் கட்டுப்பாட்டுகுள் கொண்டுவந்து தீயச்செயல்களிலிருந்து விலகி செல்ல அது வழிவகுக்கிறது. நோன்பு யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் நோற்கலாம், இறைவன் நோன்பு நோற்பதற்காக ஒரு மாதத்தையே தன் அடியாருக்கு வழங்கியுள்ளான். அம்மாதத்தில் அனைவரும் கட்டாயமாக நோன்பு நோற்க வேண்டும். அது சில காரணத்தினால் சில நபர்கள் மீது விலக்களிக்கிறது. ஆனால் அதை பின்வரும் காலங்களில் நோற்றாக வேண்டும். இதையே இறைவன் திருமறையில் இப்படி கூறுகிறான்.
"(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஃபித்யாவாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்)". (2:184)
மற்ற எல்லா காலங்களை விட ரமலான் மாதத்தில் கட்டாயம் நோன்பு நோற்பதே சிறப்பானதாகும். அதற்கு நன்மைகளும் அதிகம், காரணமில்லாமல் அந்நாளில் நோன்பை விட்டுவிட்டு பின்வரும் நாளில் அதை நோற்றால், அந்நாளின் சிறப்புக் கிடைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நபரும் தனக்காக நோன்பு நோற்க வேண்டும், பிறர் தன்னைப் பற்றி உயர்வாக கூற வேண்டும் என்பதற்காக நோன்பை எக்காலத்திலும் நோற்கக் கூடாது. நோன்பின் மாண்பைப் பற்றி நாமும் தெரிந்து அதன் மகிமையை பிறருக்கும் உணர்த்த வேண்டும், இதையே இறைவன் தன் திருமறையில் இவ்வாறுக் கூறுகிறான்.
"ரமலான் மாதம் எத்தகையதெனில் அதிலேதான் மனிதிகளுக்கு நேர்வழிகாட்டியாகவும், தீர்க்கமான தெளிவும் அருள்வழியும் உள்ளடக்கிய அல் - குர்ஆன் இறக்கப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு வைக்கட்டும்"
"உங்களில் எவராவது அக்காலத்தில் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் மற்ற நாட்களில் அதை கணக்கிடு நோற்கட்டும்! அல்லாஹ் உங்களிடமிருந்து விரும்புவதெல்லாம் இலேசைத்தான். அவன் உங்களிடமிருந்து கஷ்டத்தை விரும்பவில்லை. நோன்பு மாத நாட்களின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்து, அவன் உங்களை நேர்வழியில் நடத்தியத்ற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காவே! (இதன் மூலம்) நீங்கள் நன்றிக்கடன் செலுத்தியவர்களாகலாம்."
உலகியல் கண்ணோட்டம்:
பொதுவாக இயங்கும் சக்திப் பெற்ற அனைத்தும் ஓய்வு எடுப்பது என்பது உலக நியதி. உதாரணமாக கல்வி நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம் ஒரு கல்வி ஆண்டில் குறிப்பிட்ட நாட்கள் கோடை விடுமுறையாக விடப்படுகிறது, ஏனென்றால் ஓய்வு வேண்டும் என்பதற்காகவே, அதுபோல இயந்திரம் மற்றும் மோட்டார் வண்டி போன்றவற்றை சிலகாலம் இடை நிறுத்தி வைப்பதை காண்கிறோம், ஏனென்றால் அதன் பிறகு அது சிறப்பாக செயல்படுவதற்கு வழிவகை செய்கிறது. "அதுபோலவே தொடர்ந்து உணவு உட்கொண்டிருக்கும் மனிதன் சிறிது காலம் அதற்கு ஓய்வு கொடுத்தால் அது பிறகு மனிதனின் உறுப்புகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வழமான வாழ்விற்கு வழிவகைச் செய்கிறது.
வைத்தியக் கண்ணோட்டம்:
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது நாம் அனுபவ மூலம் கண்கூடாகக் கண்ட உண்மை.
"நோய் அணுகாது பத்தியம் காப்பது வைத்தியத்திலும் சிறந்தது" என்கிறது ஓர் அரபியப் பழமொழி.
"ஒரு ஜான் வயிறு இல்லாட்டா
உலகில் ஏது கலாட்டா? என்று பாடினான் ஒரு கவிஞன்.
உலகில் தோன்றும் எல்லா விதமான ஒழுக்ககேடுகளுக்கும், நோய் நொவ்வல்களுக்கும் மனிதனின் ஒரு ஜான் வயிறே முழு முதற் காரணியாகும்.
இதுபோலவே நாம் உண்ணும் உணவு முறை தவறி உட்கொள்ளும் போது பல இன்னல்கள் தோன்றுகின்றன, இதை ரமலான் மாதம் மிக எளிமையாக தீர்த்து வைக்கிறது. பொதுவாக உடல் சுகமில்லை என்றால் மருத்துவரை சந்திக்கிறோம் என்றால் அவர் நம்மை சோதித்துவிட்டு மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்து விட்டு முதலில் சொல்வது உணவு கட்டுப்பாட்டைத்தான்.
நோய் வராமல் தடுப்பதற்கு "நோன்பு ஒரு தற்காப்புக் கேடயம்" என்று அன்னல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
ஒழுக்கவியல் ரீதியாக:
"இளைஞர்களே! உங்களில் எவர் சக்தியும் வசதியும் உடையவராக இருக்கிறாரோ அவர் திருமணம் செய்துக் கொள்க! முடியாத பட்சத்தில் அவர் நோன்பு வைக்கட்டும். ஏனென்றால் நோன்பு பார்வையைத் தாழ்த்தி ஒழுக்கக் கேட்டில் விழுவதில் இருந்து மனிதனைப் பாதுகாக்கிறது."
பெருமானார் (ஸல்) அவர்களது இந்த அறிவுரை மூலம் நோன்பு நோற்பதில் உள்ள ஒழுக்கவியல் ரீதியாக நன்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். நோன்பு நோற்பதால் நமக்குள் தன்னடக்கம் வந்துவிடுவதோடு, அனைத்து நற்குணங்களும் நம்மை வந்து சேர்ந்துவிடும்.
நோன்பை முறிக்கும் காரணிகள்:
1.பொய் சொல்வது
2.புறம் பேசுவது
3.கோள் சொல்வது
4.பொய் சத்தியம் செய்வது
5.பெண்களை இச்சையோடு பார்ப்பது (காமப் பார்வை)
இந்த ஐந்து காரணங்களினால் நோன்பு முறிந்துவிடும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். மேலும் எவர் ஒருவர் பொய் சொல்வதையும், பிறர் நம்மைப் போற்ற வேண்டும் என வாழ்வதையும் விடவில்லையோ அவரது நோன்பிற்கு இறைவனிடம் எந்த பயனும் கிடைக்காது. மேலே குறிப்பிட்டதிலிருந்து நோன்பு தன்னை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது தனது இச்சைகளையும் கட்டுப்படுத்தி நம்மை நல்வழியில் செல்ல உதவுகிறது.
மேலும் இந்தந்த காரணங்களால் நோன்பு முறிவதில்லை:
1.மறதியாக உண்ணுவது, பருகுவது
2.வாந்தி மற்றும் பேதி ஆகுதல்
3.இரத்தம் வெளியாகுதல் (மயக்கம் அடையும் நிலையைத்தவிர)
4.ஸஹர் செய்தபிறகு தூக்கத்தில் ஸ்கலிதம் வெளியாகுதல்

இபாதத்: (இறைவணக்கம்)
ரமலான் மாதத்தில் தான் அதிகமான இறைவணக்கதில் ஈடுபட முடியும், நோன்பு நோற்று குர்ஆன் ஓதுவது, ஹதீதுகளை படிப்பது, மார்க்க பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொள்வது போன்ற காரணங்களினால் இறைவனுடைய நெருக்கத்தை அதிகப்ப்டுத்த முடிகிறது. இந்த மாதத்தில் தான் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்பட்டு சொர்க்கத்தின் கதவுகள் திறந்து வைக்கப்படுகிறது, ஏனென்றால் இம்மாத்தில் அமல்கள் அதிகமாக இருக்கும். அப்பொழுது கேட்கும் துஆக்கள் உடனே அல்லாஹுத்தஆலாவால் அங்கிகறிக்கப்படுகிறது. இறைவன் நோன்பாளிகள் கேட்கும் துஆக்களை மறுப்பதில்லை அதனை அவன் உடனே கபுல் செய்து வைக்கிறான்.

குறிப்பு: தன் வீட்டில் உள்ளவர்களையும் மற்றும் அனைவரையும் நோன்பின் மகிமையை வழியுருத்தி நோன்பு நோற்க செய்வது ஒவ்வொரு முஃமீனுடைய கடமையாக இருக்கின்றது. வல்ல அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து ஈருலக நற்பயனையும் தந்தருள்வானாக! ஆமீன்!!.
Tuesday, July 20, 2010

தொழுகை-விளக்கங்கள்

ஐந்து கடமைகளில் மிக முக்கியமானதும், மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான்!

தொழுகையினால் உடல் சுத்தம் மற்றும் மனச் சுத்தம் கிடைக்கிறது என்கிறது அல்குர்ஆன்.

"விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்குத் தயாரானால் உங்கள் முகங்களையும், முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை நீரினால் தடவி, சுரண்டை உட்பட இரு கால்களையும் கழுவிச் சுத்தம் செய்யுங்கள்! (5:6)

தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்” (2: 43).

ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்என்ற வசனத்தின் மூலம், கூட்டுத் தொழுகை கட்டாயமானது என்ற ஆதாரத்தை அதிகமான அறிஞர்கள் எடுக்கின்றனர். (தப்ஃஸீர் இப்னு கஸீர்).

போர் நிலையில் கூட ஜமாஅத்: -

‘(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்குத் தொழ வைக்க நீர் (இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும், அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்), அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப் பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக்குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர், ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களது ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது, எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்;லாஹ்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.” (4: 102).

தொழுகையாளிகளுக்கு கேடு: -

தொழுமையாளிகளுக்குக் கேடு தான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பாராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். (107: 4,5,6).

இவ்வசனம் தொழுகையாளிகள் மிக நிதானமாக கவனிக்க வேண்டிய ஒரு வசனமாகும், ஏனெனில் இவ்வசனத்தில் உள்ள எச்சரிக்கை தொழுகையாளிகளுக்குரியதாகும். கூட்டுத் தொழுகையை தவரவிடுவதும் தொழுகையில் ஏற்படும் மிகப்பெரும் அலட்ச்சியமாகும்.

மூன்று பேர் இருந்தால்: -

ஹதீஸ்:

மூன்று பேர் இருப்பார்களேயானால் அதில் ஒருவர் இமாமத் செய்யட்டும், அவர்களில் இமாமத் செய்வதற்கு மிகத்தகுதியானவர் அல்குர்ஆனை நன்றாக ஓதுபவரேஎன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரிய் (ரலி) அவர்கள், முஸ்லிம்).

இமாம் இப்னுல் கய்யூம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது: நபியுடைய கட்டளை கூட்டுத் தொழுகை கடமை என்பதை குறித்து நிற்கின்றது.

பிரயாணத்திலும் கூட்டுத் தொழுகை கட்டாயம்: -

இருவர் நபியிடத்தில் ஒரு பிரயாணத்தை நாடியவர்களாக வந்தனர், நீங்கள் இருவரும் வெளியேறினால் (தொழுகை நேரம் வந்தவுடன்) பாங்கு சொல்லுங்கள், பின்னர் இகாமத் சொல்லுங்கள், பிறகு உங்களில் வயதில் பெரியவர் இமாமத் செய்யவும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: மாலிக் இப்னுல் {வைரிஸ் (ரலி). புஹாரி).

இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது: இந்த ஹதீஸின் அடிப்படையில்: இருவர், இருவருக்கு அதிகமானவர்கள் ஜமாஅத்தாக கருதப்படுவர்.

பாங்குக்குப் பின் மஸ்ஜிதை விட்டு வெளியேறுவது தடை: -

முஅத்தின் பாங்கு சொன்னதன் பின் ஒருவர் மஸ்ஜிதை விட்டு வெளியேறினார், இந்த மனிதர் காஸிமின் தந்தை (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஷரீக் அறிவிக்கும் ஒரு செய்தியில்நீங்கள் மஸ்ஜிதில் இருக்கும் நிலையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டு விட்டால் தொழுகையை நிறைவேற்றும் வரை உங்களில் எவரும் வெளியேற வேண்டாம்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எமக்கு கட்டளையிட்டார்கள். (அஹ்மத்).

நாம் ஒரு முறை மஸ்ஜிதில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம், முஅத்தின் (தொழுகைக்காக) பாங்கு சொன்னார், அதன் பின் ஒரு மனிதர் மஸ்ஜிதை விட்டு வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் காஸிமின் தந்தை (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவராவார். (முஸ்லிம்).

சலுகை வழங்காமை: -

கண்கள் தெரியாத ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னை மஸ்ஜிதுக்கு அழைத்துச் செல்வதற்கு ஒரு துணை இல்லை எனக்கு வீட்டில் தொழுவதற்கு சலுகை உள்ளதா? நபியவர்கள் அவர்களுக்கு சலுகை வழங்கினார்கள். அவர் திரும்பிச் சென்ற போது மறுபடியும் அழைத்து நீர் பாங்கோசையை கேட்கின்றீரா? அவர் ஆம் என்று கூற அப்படியானால் நீர் மஸ்ஜிதுக்கு சமூகமளிக்க வேண்டும்என கட்டளையிட்டார்கள். (முஸ்லிம்).

நயவஞ்சகனுக்கு சிரமமானதாகும்: -

பஃஜ்ர், இஷாவை விட நயவஞ்சகர்களுக்கு சிரமமான தொழுகை வேறொன்றுமில்லை. அவர்கள் அதன் (நன்மையை) அறிவார்களானால் தவழ்ந்த நிலையிலாவது (அதை நிறைவேற்றுவதற்கு) சமூகமளிப்பார்கள். முஅத்தினுக்கு தொழுகைக்கு இகாமத் சொல்வதற்கு ஏவி, மனிதர்களுக்கு தொழுகை நடத்த மற்றுமொருவருக்கு ஏவி, அதற்குப் பிறகும் மஸ்ஜிதுக்கு வராதவர்களை (வராதவர்களின் வீடுகளை) எரித்து விட (நான் விரும்புகிறேன்)” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி).

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஃஜ்ருடைய தொழுகையை எமக்கு தொழுவித்தார்கள். இன்ன மனிதர் வந்திருக்கின்றாரா இல்லை என்று சொன்னார்கள் ? இன்ன மனிதர் வந்திருக்கின்றாரா? இல்லை என்று சொன்னார்கள். நிச்சயமாக இந்த இரு தொழுகைகளும் நயவஞ்சகர்களுக்கு சிரமமானதாகும். அந்த இரு தொழுகையின் (சிறப்புகளை) அவர்கள் அறிவார்களானால் முழங்கால்களால் தவழ்ந்த நிலையிலாவது சமூகமளித்திருப்பார்கள். நிச்சயமாக (தொழுகையின்) முதல் வரிசையானது வானவர்களின் வரிசையைப் போன்றதாகும். அதன் சிறப்பை நீஙகள் அறிவீர்களானால் மிக வேகமாக அதன் பால் விரைவீர்கள். ஒருவர் மற்றொருவருடன் (கூட்டாக) தொழுவது தனியாகத் தொழுவதை விட சிறப்பானதாகும். இருவருடன் (கூட்டாகத்) தொழுவது, ஒருவருடன் (கூட்டாகத்) தொழுவதை விட சிறப்பானதாகும். இவ்வாறு எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க (அது) அல்லாஹ்வின் விருப்த்திற்குரியதாக இருக்கும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (உபைய் இப்னு கஃப் (ரலி), அபூதாவுத்).

பகிரங்க முனாபிஃக் : -

ஐந்து நேரத் தொழுகைக்காக எங்கிருந்து அழைப்பு வருகின்றதோ (அதை அங்கு) பேணிப்பாதுகாத்து தொழுது வாருங்கள். நிச்சயமாக அது நேரிய சுன்னாக்களில் நின்றும் உள்ளவையாகும், அல்லாஹ், தனது தூதருக்கு மார்க்கமாக்கியது நேரிய சுன்னாதக்களைத் தான், வெளிப்படையான நயவஞ்சகனைத் தவிர வேறு எவரையும் ஜமாஅத்துக்கு வராமல் நாங்கள் பார்க்கவில்லை. நிச்சயமாக (இயலாதவைரக் கூட) இருவரின் துணை கொண்டு ஸப்ஃபில் தொழுகைக்காக அழைத்து வந்து நிறுத்தப்படுவதைப் பார்த்தோம். உங்களில் எவருக்கும் வீட்டில் மஸ்ஜித் இல்லை. நீங்கள் உங்கள் வீடுகளில் தொழுது மஸ்ஜித்களை விட்டு விடுவீர்களானால் நீங்கள் நபியுடைய வழி முறையை விட்டவர் ஆவீர்கள். நீங்கள் நபியுடைய சுன்னத்தை விட்டு விட்டீர்களானால் நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் கூறினார்கள். (அபூதாவுத்).

நாளை எவன் ஒரு (உண்மை) முஸ்லிமாக அல்லாஹ்வை சந்திக்க விரும்புகின்றானோஐந்து நேரத் தொழுகைக்காக எங்கிருந்து அழைப்பு வருகின்றதோ (அதை அங்கு) பேணிப்பாதுகாத்து தொழுது வரட்டும். நிச்சயமாக அது நேரிய சுன்னாக்களில் நின்றும் உள்ளவையாகும், அல்லாஹ், தனது தூதருக்கு மார்க்கமாக்கியது நேரிய சுன்னாக்களைத் தான். நீங்கள் இந்த (நயவஞ்சனைப் போன்று) வீட்டில் தொழுவீர்களானால், உங்கள் தூதரின் வழி முறையை விட்டவர்கள் ஆவீர்கள். உங்கள் தூதரின் வழி முறையை விட்டு விட்டால் நீங்கள் வழிதவறி விட்டீர்கள். உங்களில் எவர் அழகான முறையில் வுழுச் செய்து ஏதாவது ஒரு மஸ்ஜிதுக்கு செல்வாரானால் அவர் வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் பாவங்கள் மன்னிக்கப்படும், அந்தஸ்து உயர்த்தப்படும், நன்மைகள் பதியப்படும். வெளிப்படையான நயவஞ்சகனைத் தவிர வேறு எவரையும் ஜமாஅத்துக்கு வராமல் நாங்கள் பார்க்கவில்லை. நிச்சயமாக (இயலாதவைரக் கூட) இருவரின் துணை கொண்டு ஸப்ஃபில் தொழுகைக்காக அழைத்து வந்து நிறுத்தப்படுவதைப் பார்த்தோம்என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

ஷைத்தானின் ஆதிக்கம்: -

எந்த ஒரு ஊரிலாவது, கிராமத்திலாவது, மூன்று பேர் இருந்து அங்கு ஜமாஅத்தாக தொழுகை நிலை நாட்டப் படவில்லையானால் ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி விடுகின்றான். உங்களுக்கு ஜமாஅத்தை நான் வலியுறுத்துகின்றேன். தனியாக இருக்கும் ஆட்டைத் தான் ஓநாய் பிடித்து சாப்பிடும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூதர்தா (ரலி), அபூதாவுத், நஸாயி).

கூட்டுத் தொழுகையின் சிறப்பு: -

இறையில்லத்துடன் எவருடைய உள்ளம் ஒன்றிப்போயிருந்ததோ அவருக்கு அர்ஷின் கீழ் நிழல் கிடைக்கும்:

எவரது உள்ளம் இறையில்லத்துடன் ஒன்றிப்போயிருக்கிறதோ அவருக்கு நாளை மறுமையில் அர்ஷின் கீழ் நிழல் கிடைக்கும்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் அளிக்கும் பொழுதுஉள்ளம் இறையில்லத்துடன் ஒன்றிப்போயிருப்பதென்பதுமஸ்ஜிதுடன் உள்ள இருக்கமான தொடர்பு, கூட்டுத்தொழுகையில் தவராது பங்கேற்றல் ஆகியவையாகும், இதுவல்லாது தொடர்ந்து பள்ளியில் தங்கியிருப்பது என்பது இதன் கருத்தல்ல.

இந்த ஹதீஸ் தொடர்பாக இமாம் அல்லாமா அயினி (ரஹ்) அவர்கள் விளக்கமளிக்கும் பொழுது மஸ்ஜித் என்பது அல்லாஹ்வின் வீடாகும் அதை நோக்கி வருகை தருபவர்கள் அவனது விருந்தினராவர், அவன் எவ்வாறு தனது விருந்தாளிகளை கௌரவப்படுத்தாமல்
இருப்பான்?

அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான செயல்கள்: -

அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்விற்கு மிக விருப்பமான செயல்கள் யாவை? எனக் கேட்டேன் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதாகும். பிறகு எது என கேட்டேன், பெற்றோருக்கு நன்மை செய்தலாகும் பிறகு எது எனக் கேட்டேன் இறை வழியில் போர் புரிவதாகும்எனக்கூறினார்கள். (புஹாரி).

கூட்டுத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு நடந்து செலவதன் சிறப்பு: -

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்: மஸ்ஜிதைச் சூழ காலியான நிலங்கள் இருந்து போது, பனு ஸலமா தனது வீட்டை மஸ்ஜிதுக்கு அன்மையில் அமைத்துக்கொள்ள விரும்பினார், நபி (ரலி) அவர்களுக்கு இச்செய்தி அறியக் கிடைத்த பொழுது, நீங்கள் உங்கள் வீடுகளை மஸ்ஜிதுக்கு அண்மையில் மாற்றுவதற்கு விரும்புகின்றீர்களா? ஆம் அல்லாஹ்வின் தூதரே! என பதிலளித்தனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் உங்களது வீடுகளும் நன்மைகளை பதிவு செய்கின்றன், உங்களது வீடுகளும் நன்மைகளை பதிவு செய்கின்றன என்று கூறினார்கள். (முஸ்லிம்).

கூட்டுத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு ஒருவர் நடந்து செல்வதன் மூலம் அவரது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன், அவரது அந்தஸ்தும் உயரும்: -

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களது பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய, அந்தஸ்துகள் உயரக்கூடிய ஒரு செயலை அறிவிக்கட்டுமா? அதற்கு நபித்தோழர்கள் அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே? எனக்கூறினர். சிரமமான நேரங்களில் நல்ல முறையில் வுழூச் செய்வது, மஸ்ஜிதுக்கு அதிக எட்டுக்களை வைத்து நடந்து செல்வது, ஒரு தொழுகைக்குப் பின் மற்றொரு தொழுகையை எதிர்ப் பார்த்து அமர்ந்திருப்பதுஇது உறுதி மிக்கதாகும்என நபிபள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒருவர் தொழுகைக்காக பரிபூரணமாக வுழுச் செய்து, பிறகு கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக நடந்து சென்று, மக்களுடன் கூட்டாக மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றுவாரானால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவிப்பதாவது: ‘ஒருவர் மஸ்ஜிதை நோக்கி வைக்கக்கூடிய ஒவ்வொரு எட்டுக்கும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும். ஓவ்வொரு எட்டுக்கும் நன்மைகள் பதியப்படும். வரும் போதும் செல்லும் போதும் அவ்வாறே நடக்கிறதுஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘கூட்டாக நிறைவேற்றப்படும் தொழுகை தனியாக வீட்டிலோ வியாபார ஸ்தலத்திலோ நிறைவேற்றப்படும் தொழுகையை விட இருபத்தி ஐந்து மடங்கு உயர்ந்ததாகும். உங்களில் ஒருவர் அழகாக வுழூச் செய்து, தொழுகையை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு மஸ்ஜிதுக்குச் செல்லும் போது அவர்; வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவரது அந்தஸ்து உயர்வு பெறுகிறது, பாவங்கள் மன்னிக்கப்படுகிறது, இன்னும் வானவர்கள் அவர்; மஸ்ஜிதில் தொழுகையை எதிர்ப்பார்த்து அமர்ந்திருக்கும் காலமெல்லாம் அல்லாஹ்வின் அருள்வேண்டி அவருக்காக பிரார்த்திக்கின்றனர். யா அல்லாஹ் அவருக்கு அருள் புரிவாயாக!” (என பிரார்த்திக்கின்றனர்) என நபிகளார் (ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

தொழுகையை நிறைவேற்றுவதற்காக வுழூச்செய்து வெளியேறியவருக்கு கிடைக்கும் கூலி இஹ்ராம் அணிந்து ஹஜ்{க்காக தயாராகி செல்பவருக்கு கிடைக்கும் கூலியைப் போன்றதாகும்.

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஒருவர் தனது இல்லத்திலிருந்து வுழூச்செய்து பர்லான தொழுகைக்காக வெளியேறிச் செல்கிறார் அவருடைய கூலி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து வெளியேறிச் செல்பவருக்கு கிடைக்கும் கூலியைப் போன்றதாகும்என நபிகளார் (ரலி) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், அஹ்மத்).

தொழுகைக்காக வெளியேறிச் செல்பவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார்: -

மூவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றனர்: அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்காக வெளியேறிச் சென்ற வீரர். அவர் மரணிக்கும் வரை அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார். (அவர் அதில் ஷஹீதகாகி விட்டால்) சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுவார். அல்லது (மகத்தான) நன்மையுடனும், கஃனீமத்துடனும் திரும்புவார். (இரண்டாமவர்) மஸ்ஜிதுக்குச் சென்றவர் இவரும் மரணிக்கும் வரை அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார் (இவர் இதே நிலையில்) மரணித்தால் சுவர்க்கம் நுழைவிக்கப்படுவார். அல்லது நன்மைகளுடனும், நற்பாக்கியங்களுடனும் திரும்புவார். (மூன்றாமவர்) தனது வீட்டுக்குள் ஸலாம் சொன்ன்வராக நுழைந்தவர். இவரும் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலிய் (ரலி), அபூதாவுத்).

பரிபூரண ஒலி: -

புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் இருளில் மஸ்ஜிதுக்கு நடந்து செல்பவருக்கு நாளை மறுமையில் பரிபூரண ஒலி கிடைக்கும் என நபி (ரலி) அவர்கள் நன்மாராயம் கூறினார்கள்”. (அபூதாவுத், திர்மிதி).

முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படல்: -

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இமாம்ஆமின்சொன்னால் நீங்களும்ஆமீன்சொல்லுங்கள், எவருடைய ஆமீனும் வானவர்களுடைய ஆமீனும் நேர்பட்டு விடுகின்றதோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

நரகத்தை விட்டு விடுதலை: -

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவர் நாற்பது நாட்கள் முதல் தக்பீருடன் அல்லாஹ்விற்காக தொழுது வருவாரோ அவருக்கு இரண்டு விடுதலைப் பத்திரங்கள்; எழுதப்படும். ஓன்று நரகத்தை விட்டு விடுதலை, மற்றது நயவஞ்சகத் தனத்தை விட்டு விடுதலைஎன நபிகளார் (ரலி) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

இஷாவையும், பஜ்ரையும் ஜமாஅத்துடன் தொழுது வருவதன் சிறப்பு: -

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ அம்ரா அறிவிக்கிறார்: உஸ்மான் (ரலி) மஃரிப் தொழுகையின் பின் மஸ்ஜிதில் தனியாக அமர்ந்திருந்தார் நான் அவர் பக்கத்தில் அமர்ந்தேன். என் சகோதரனின் மகனே! நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். எவர் இஷாவுடையத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவாரோ அவர் பாதி இரவு நின்று வணங்கியவர் போன்றவராவார், எவர் {பஹ{டைய தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுவாரோ அவர் முலு இரவும் நின்று வணங்கியவர் போன்றவராவார் (முஸ்லிம்).

முதல் ஸப்ஃ:-

ஒரு கூட்டம் முதல் ஸப்ஃபை விட்டு தாமதித்தவர்களாகவே இருக்கின்றனர், எதுவரை எனில் அவர்களை அல்லாஹ் நரகிலும் பிற்படுத்தும் வரைஎன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), அபூதாவுத்.

ஒரு முறை நபியவர்கள் எம்மிடம் வந்து வானவர்கள் தனது ரப்பிடம் அணிவகுப்பது போன்று நீங்கள் அணிவகுக்க மாட்டீர்களா? என வினவினார். வானவர்கள் தனது ரப்பிடம் எவ்வாறு அணிவகுக்கின்றனர். அவர்கள் முதல் வரிசையை முழுமைப்படுத்திய பின்னர் இரண்டாவது வரிசையை ஆரம்பிப்பர்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி), நஸாயி.

நபிகளார் (ஸல்) அவர்கள் முதல் ஸப்பில் இருப்பவர்களுக்கு மூன்று முறை அருள் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கு ஒரு முறை அருள்வேண்டிப் பிரார்த்தித்தார்கள்என இர்பாலிப்னு ஸாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (அஹ்மத்).

அபூ உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நிச்சயமாக அல்லாஹ் முதல் ஸப்பில் உள்ளவர்களுக்கு அருள் புரிகிறான், அவனது வானவர்களும் அவர்களுக்காக அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றனர், அப்பொழுது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கு எனக்கேட்டனர், நிச்சயமாக அல்லாஹ் முதல் ஸப்பில் உள்ளவர்களுக்கு அருள் புரிகிறான், அவனது வானவர்களும் அவர்களுக்காக அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றனர், அப்பொழுதும் நபித்தோழர்கள், இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கு எனக்கேட்டனர், ஆம் இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கும் தான், ஆம் இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கும் தான் எனக் கூறினார். (அஹ்மத்).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீங்கள், அல்லது அவர்கள் முதல் ஸப்பின் சிறப்பை அறிவீர்களானால் சீட்டுக் குலுக்கிப் பார்த்து அந்த சந்தர்ப்பை பெற்றுக் கொள்வீர்கள்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்